ஜோகூர் பாரு, மார்ச்.30-
அண்மையில் ஜோகூர் பாருவில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஜோகூர் பாரு உத்தாராவில், மாவட்ட காவல் துறைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஒரு குடியிருப்பின் முன் 21 வயது இளைஞர் தாக்கப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் தனது சகோதர சகோதரியுடன் பெரோடுவா அல்ஸா காரில் சென்ற போது ஒரு கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் வண்டியிலிருந்து இறங்கியதும், மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டார் என்று பல்வீர் சிங் கூறினார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான மூன்று நிமிடம் 21 வினாடிகள் கொண்ட காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.