கோலாலம்பூர், மார்ச்.30-
ஈகைப் பெருநாள் பண்டிகையின் போது தீபகற்ப மலேசியா முழுவதும் மின்சாரம் சீராக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தெனாகா நேஷனல் பெர்ஹாட் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. டிஎன்பியின் விநியோக வலையமைப்பு தலைமை நிர்வாக அதிகாரி மஹாதீர் நோர் இஸ்மாயில் குறிப்பிடுகையில், நாடு முழுவதும் மின்சார விநியோக வலையமைப்பை மேம்படுத்தும் பல திட்டங்களை நிறுவனம் செயல்படுத்தியுள்ளது என்றார். மேலும் கூடுதல் ஏற்பாடுகளாக முக்கிய இடங்களில் 271 நடமாடும் மின் உற்பத்தி ஜெனரேட்டர்களை நிறுவியுள்ளது.
மின்சாரம் சீராக விநியோகிக்கப்படுவதை உறுதிச் செய்வதற்காக நோன்புப் பெருநாள் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி மூன்றாம் நாள் வரை 10,000க்கும் மேற்பட்ட டிஎன்பி ஊழியர்கள் 24 மணி நேரமும் தயாராக இருப்பார்கள். மின் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டால் டிஎன்பி தொழில்நுட்பக் குழுவினர் தொடர்ந்து கவனமாகக் கண்காணித்து, விரைவான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று அவர் கூறினார். மேலும், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வீட்டை விட்டு வெளியேறும் போதும், திறந்த இல்ல உபசரிப்பை நடத்தும் போதும் மின்சார பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பயனர்களுக்கு மகாதீர் அறிவுறுத்தினார்.