கோத்தா கினபாலு, மார்ச்.30-
சபா மாநில அரசாங்கத்தின் செலவினங்கள் குறித்து, வாரிசான் கட்சித் தலைவர்கள் எழுப்பிய கேள்விகள் மாநில அரண்மனைக்கு எதிரான தாக்குதல் அல்ல என்று வாரிசான் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஷாபீஃ அப்டால் வலியுறுத்தினார். மாறாக, மக்களின் பணம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவே இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டன என்று சபா முன்னாள் முதலமைச்சருமான ஷாபீஃ கூறினார்.
வாரிசான் கட்சித் தலைவர்கள் மாநில அரண்மனையை அரசியலில் இழுத்து வருவதாக சபா முதல்வர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் குற்றம் சாட்டியதற்கு ஷாபீஃ இவ்வாறு பதிலளித்தார். வாரிசான் கட்சித் தலைவர்கள் அரண்மனையை அவமதிக்கவில்லை என்றும், சபா மக்கள் வாழ்க்கைச் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில், ஒரு கொண்டாட்டத்திற்கு மக்களின் பணத்தைச் செலவிடுவது சரியா இல்லையா என்று கேள்வி எழுப்பியதாகவும் அவர் கூறினார். மக்களாட்சி அமைப்பில், அரசாங்கச் செலவினங்கள் குறித்து கேள்வி கேட்பது தவறு இல்லை என்றும், மக்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட வேண்டும் என்றும் ஷாபீஃ வலியுறுத்தினார்.