கோலாலம்பூர், மார்ச்.30-
தலைநகர், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் கோலாலம்பூர் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகளுடன் சண்டையிட்ட பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலூன் வியாபாரி, குறிப்பிட்ட இடத்தில் அவர் வியாபாரம் செய்யக்கூடாது என அதிகாரிகள் மூன்று முறை எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார். உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்ததை பலூன் வியாபாரி ஸைமுடின் அஸ்லான் ஒப்புக்கொண்டிருந்தார். அதிகாரிகள் என்றால் தமக்கு பயம் எனக் கூறிய ஸைமுடின், அதிகாரிகளைப் பார்த்தால் தமது பொருட்களை பறிமுதல் செய்வார்கள்” என்று காணொலியில் அவர் கூறினார். ஸைமுடின் உண்மையில் உரிமம் பெற விண்ணப்பிக்க விரும்பினார். ஆனால் அதற்கான நடைமுறைகள் அவருக்குத் தெரியவில்லை. ஈகை பெருநாளை முன்னிட்டு பணம் சம்பாதிக்கவும், வாயுத் தொல்லை நோயால் அவதிப்படுவதாலும் வியாபாரம் செய்ததாக அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து டிபிகேல் விளக்கம் அளித்திருந்தது. பாதசாரிகள் நடக்கும் பாதையில் உரிமம் இல்லாத பல விற்பனையாளர்கள் வணிகம் செய்து, மக்களின் நடமாட்டத்தைத் தடுத்து, நெரிசலை ஏற்படுத்துவதை அமலாக்க அதிகாரிகள் கண்டறிந்தனர். அமலாக்க அதிகாரிகள் முதலில் விற்பனையாளர்களை எச்சரித்தனர். அதன் பொருட்டு வியாபாரிகள் விலகிச் சென்றனர். ஆனால் ஒரு பலூன் வியாபாரி மட்டும் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ் படிய மறுத்து ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். இரண்டு முறை எச்சரித்தும், பலூன் வியாபாரி உத்தரவுக்கு கீழ் படிய மறுத்து வழக்கம்போல் வியாபாரம் செய்தார். மூன்றாவது எச்சரிக்கை விடுத்தபோது, பலூன் விற்பனையாளர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். பணியில் இருந்த அமலாக்க அதிகாரியை அவர் தள்ளியதால் அங்கு அமளி துமளி ஏற்பட்டது என்று சிபிகேஎல் அறிக்கையில் கூறியுள்ளது. எக்ஸ்ரே பரிசோதனை முடிந்து முதுகெலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் ஸைமுடின் கூறினார். தான் வெளிநாட்டவர் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஸைமுடின், தான் ஜெராண்டுட், பகாங்கைச் சேர்ந்தவர் என்று கூறினார்.