பெந்தோங், ஏப்ரல்.01-
கோாலாலம்பூர், காராக் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நிகழ்ந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விபத்துக்குக் காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் லோரி ஓட்டுநர், நான்கு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
52 வயதுடைய அந்த நபர், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹான் முகமட் காஹார் தெரிவித்தார்.
அந்த நபர், 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
அவர் ஏற்கனவே நான்கு குற்றப்பதிவுகளை கொண்டுள்ளார். அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக ஸைஹான் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையின் 50.8 ஆவது கிலோ மீட்டரில் லோரி, ஹோண்டா அக்கோர்ட், புரோட்டோன் வாஜா, புரோட்டோன் சாகா மற்றும் சுபாரு ஆகிய ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் ஹோண்டா அக்கோர்ட் காரில் பயணம் செய்த 29, 34, 61 வயதுடைய மூவர் உயிரிழந்தனர்.