நில நடுக்க அபாயத்தில் மலேசியா – எச்சரிக்கிறார் புவியியல் நிபுணர்

கோலாலம்பூர்,ஏப்ரல்.01-

மியன்மார், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளை உலுக்கியதைப் போல சக்திவாய்ந்த நிலநடுக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ள மலேசியா தயாராக இருக்க வேண்டும் என்று புவியியலாளர் ஒருவர் எச்சரிக்கிறார்.

புவியியல் அமைப்பு முறையில் மலேசியா, பசிபிக் நெருப்பு வளையத்திற்கு வெளியே அமைந்திருந்தாலும், அது பூகம்ப அச்சுறுத்தலில் இருந்து விடுபடவில்லை என்று நாட்டின் முன்னணி புவியியலாளரான டாக்டர் நோர் ஷாஹிடா நாஸேர் கூறுகிறார்.

மலேசியாவில் குறிப்பாக சபா மாநிலத்தில், இயல்பாகவே புவியியல் அமைப்பு முறையில் பல பிளவுக் கோடுகள் இருப்பதால், பூகம்பங்களுக்கு அதிக ஆபத்து உள்ள பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார்.

ரானாவ், குண்டாசாங் போன்ற பகுதிகள் பெரும்பாலும் பூகம்பங்கள் ஏற்படும் இடங்களாகும் என்றும், சபாவில் முன்பு பதிவான பல சம்பவங்கள் மாநிலத்தில் பெரிய பூகம்பங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்த கவலைகளை ஏற்படுத்தி வருவதாகவும் டாக்டர் நோர் ஷாஹிடா கூறுகிறார்.

மியான்மாரில் நடந்தது போல் பூகம்பம் நிலைக்கொண்ட மையம் ஆழமற்றதாக இருந்தால் ஆபத்து அதிகமாக இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக யுகேஎம் எனப்படும் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பீடத்தின் புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை விரிவுரையாளரான டாக்டர் நோர் ஷாஹிடா குறிப்பிட்டார்.

மியான்மரைப் போல ஆழமற்ற பெரிய சக்தியுடனும் ஏற்படும் நிலநடுக்கத்தின் விளைவுகள், மேற்பரப்பு அலைகளின் விரிவான பரவல் காரணமாக அங்கே ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம், மலேசியாவில் உணரப்பட்டு இருக்கிறது என டாக்டர் நோர் ஷாஹிடா தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS