கோலாலம்பூர், ஏப்ரல்.01-
கோலாலம்பூருக்கு அருகில் புத்ரா ஹைட்ஸில் பெட்ரோனாசுக்குச் சொந்தமான நிலத்தடி எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு பயங்கர தீ பரவியதில் 25 பேர் காயமுற்றனர். ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் நிகழ்ந்தது. காயமுற்ற அனைவருக்கும், சுகாதார அமைச்சின் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே அவசர சிகிக்சையை அளித்தனர்.
காயமுற்றவர்கள், அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் என்று நம்பப்படுகிறது.
தீயின் ஜுவாலை, கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு , வான் உயரே நோக்கி எழும்பியதில், அதன் கோரத்தை, பல கிலோ மீட்டர் தூரத்திலிருந்து மக்கள் பார்க்க முடிந்தது.
டாமன்சாரா – பூச்சோங் நெடுஞ்சாலையான LDP அருகில் நிகழ்ந்த இத்தீவிபத்து தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
தீயின், உஷ்ணத்தின் தாக்கம், அருகில் உள்ள வீடமைப்புப் பகுதிகளில் உணர முடிந்தது. சில வீடுகள் தீப்பற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் சுபாங் ஜெயா தீயணைப்பு நிலையத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் உதவி இயக்குநர் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
காலை 8.10 மணியளவில் அப்பகுதியில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்த நிலையில் அடுத்த சில நிமிடங்களில் இத்தீ குறித்து தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
தீயை அணைக்கும் பணியில் அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களின் உதவியுடன் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
காயமுற்றவர்களில் ஐவர், செர்டாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.