ஜோகூர் பாரு, ஏப்ரல்.01-
ஜோகூர் பாரு, இஸ்தானா பெசாரில் இன்று நடைபெற்ற ஹரிராயா பொது உபசரிப்பில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கலந்து சிறப்பித்தார்.
ஜோகூர் அரச குடும்பத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் இளஞ்சிவப்பு நிற சட்டை அணிந்திருந்த மாமன்னர், வருகையாளர்களையும், விருந்தினர்களையும் இன்முகத்துடன் வரவேற்று கைகுலுக்கி, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மாமன்னருடன் பலர், உற்சாகமாக தங்கள் கைப்பேசிகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டதைக் காண முடிந்தது.
ஹரி ராயாவின் இரண்டாவது நாளில் நடைபெற்ற இந்த திறந்த இல்ல பொது உபசரிப்பு, காலை 9.30 மணியளவில் தொடங்கியது. சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காலை 7.30 மணி முதலே அரண்மனைக்கு வெளியே வருகையாளர்கள் நீண்ட வரிசையில் நிற்கத் தொடங்கி விட்டனர்.
உள்ளூர் உணவு வகைகளான கெதுபாட், லெமாங், ரெண்டாங், கோழிக்கறி, மீ என பலவகையான பதார்த்தங்களும், பலகாரங்களும் வருகையாளர்களுக்குப் பரிமாறப்பட்டன.