கோலாலம்பூர், ஏப்ரல்.01-
சுபாங் ஜெயா, ஜாலான் புத்ரா ஹார்மோனி, புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடித்து, பரவிய மோசமானத் தீச் சம்பவத்தில் தீக்காயங்களுக்கு ஆளாகியவர்களின் எண்ணிக்கை 112 பேராக உயர்ந்தது. அதே வேளையில் இந்த தீச் சம்பவத்தில் 49 வீடுகள் சேதமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், தீ பரவிய நிலத்தடி எரிவாய் குழாய் பொருத்தப்பட்டுள்ள பகுதிக்கு அருகாமையில் உள்ள தாமான் ஹார்மோனி மற்றும் கம்போங் சுங்கை பஹாரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். பலரது உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. பலர் மூச்சுச் திணறலுக்கு ஆளாகியுள்ளனர். மாலை 4.20 மணி வரையில் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 63 பேர், சைபர்ஜெயா, செர்டாங் மற்றும் புத்ராஜெயா ஆகிய மூன்று மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தீயணைப்பு, மீட்புப்படையினர் மற்றும் போலீஸ் துறை கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
வீடுகள் சேதமுற்ற நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மஸ்ஜிட் நுருல் இமான் மற்றும் மஸ்ஜிட் புத்ரா ஹைட்ஸ் ஆகிய பள்ளி வாசல்களில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இதுவரையில் உயிருடற் சேதம் எதுவும் நிகழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் நிலை கவலைக்கிடமாக இருந்து வருகிறது.
கொழுந்து விட்டு எரியும் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெட்ரோனாஸிற்கு சொந்தமான நிலத்தடி குழாயில் பரவிய தீயை கட்டுப்படுத்துவதற்கு டெங்கில், பூச்சோங், பத்து தீகா மற்றும் மேரு ஆகிய நான்கு பகுதிகளின் பிரதான நிலத்தடி எரிவாயு குழாய்களுக்கான வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன.
அந்த இயற்கை எரிவாயுவின் வெளியேற்றத்தை முழுமையாகk கட்டுப்படுத்த குறைந்தது 4 மணி நேரம் தேவைப்படும் என்று பெட்ரோனாஸ் அறிவித்துள்ளது.
இதனிடையே தீயைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் விரும்பத் தகாத சம்பவம் எதுவும் நிகழ்ந்து விடாமல் இருக்க சீபீல்டு முதல் பண்டார் சௌஜானா புத்ரா வரையில் பிரதான சாலைகள் அனைத்தும் போக்குவரத்துக்கும் மூடப்பட்டுள்ளன.
அந்த சாலை வழியாக நிலத்தடி எரிவாயும் குழாய் செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளாஸா டோல் யுஎஸ்ஜே மற்றும் புத்ரா ஹைட்ஸ் ஆகியவற்றின் வாயிலாக எலிட் நெடுஞ்சாலைக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளதாக பிளஸ் மலேசியா பெர்ஹாட் அறிவித்துள்ளது.