தங்காக், ஏப்ரல்.01-
ஹரிராயா விடுமுறையை உல்லாசமாகக் கழிப்பதற்காக மலாக்கா, ஜாசின், அசாஹானில் உள்ள லாமான் தீகா புடாயா நீர் வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஓர் இந்தியப் பிரஜையின் உடல் இன்று கண்டு பிடிக்கப்பட்டது.
பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் சுங்கை லுபோக் கெடொண்டோங் ஆற்றில் காலை 9.15 மணியளவில் அந்த ஆடவரின் உடல் மீட்கப்பட்டதாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் ரொஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.
நீர் வீழ்ச்சியின் மலை முகட்டிலிருந்து திடீரென்று அதிகரித்த நீர் பெருக்கத்தினால், குளித்துக் கொண்டு இருந்தவர்களில் நால்வர், நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் மூவர் பொது மக்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டனர்.
27 வயதுடைய அந்த இந்தியப் பிரஜை, நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு, மீட்புப்படையினர் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
சவப் பரிசோதனைக்காக அந்த ஆடவரின் உடல் மருத்துவமனைச் சவக்கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக ரொஸ்லான் குறிப்பிட்டார்.