பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.01-
சுபாங் ஜெயாவில் இன்று ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தினால் சுபாங் விமானச் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று மலேசிய வான் போக்குவரத்து இலாகாவான CAAM தெரிவித்துள்ளது.
விமானம் தரையிறங்குதல் மற்றும் விமானப் புறப்பாடு அனைத்தும் சீராக இருந்ததாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி நோராஸ்மான் மாஹ்மூட் தெரிவித்தார்.
எனினும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் தரையிறங்குவதற்கும், விமானங்கள் புறப்படுவதற்கும் மாற்று ஓடுபாதையைப் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தீயின் உக்கிரம் வானை நோக்கி படுவேகத்தில் இருந்ததால் விமானங்கள் அவ்வழியே செல்லாமல் இருப்பதற்கு ஓடுபாதை மட்டும் மாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தீ ஏற்பட்ட பகுதி, விமான நிலையத்திலிருந்து தெற்கை நோக்கி இருந்ததால் விமானங்கள் தரையிறங்குவதற்கும், புறப்படுவதற்கும் வடப் பகுதி பயன்படுத்தப்பட்டதாக நோராஸ்மான் மாஹ்மூட் குறிப்பிட்டார்.