கோரத் தீ விபத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 2,500 ரிங்கிட் உதவித் தொகை, சேதமடைந்த வீடுகளில் உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரிங்கிட் – பிரதமர் அறிவிப்பு

சுபாங் ஜெயா, ஏப்ரல்.01-

சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் இன்று காலையில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 2,500 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

அதேவேளையில் இந்த தீச் சம்பவத்தினால் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும் சேதமுற்ற வீடுகளை மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் மற்றும் பெட்ரோனாஸ் ஆகியவை கூட்டாக இணைந்து சீர்படுத்திக் கொடுக்கும் என்று பிரதமர் உத்தரவாதம் அளித்தார்.

தீ நிகழ்ந்த பகுதியை இன்று மாலையில் நேரில் வருகை தந்து பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சீரமைப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும். அரசாங்க ஏஜென்சிகள் அனைத்தும், முழு வீச்சில் இதற்கு ஒத்துழைப்பு நல்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களை மீட்பதிலும், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதிலும், மருத்துவ சிகிச்சை வழங்குவதிலும், நிவாரணம் அளிப்பதிலும் துணை நின்ற அரசாங்க ஏஜென்சிகளுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS