நீலாய், ஏப்ரல்.02-
நெகிரி செம்பிலான், நீலாய் நகரில் உள்ள வெளிநாட்டினரின் தங்குமிடம் குறித்தும், வணிக வளாகங்கள் குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், சிரம்பான் நகராண்மைக் கழக அமலாக்கப் பிரிவு, கடந்த மார்ச் 27ஆம் தேதி அன்று, அதிகாலை 12.10 மணிக்கு ஒரு சிறப்பு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில், லாட் 65473, முக்கிம் பண்டார் நீலாய் உத்தாமாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகம் உரிமம் இல்லாமல் ஒரு மளிகைக் கடையாக மாற்றப்பட்டு, வெளிநாட்டினரால் நடத்தப்படுவது கண்டறியப்பட்டது.
இதன் விளைவாக, எம்பிஎஸ் அந்த வணிக நடவடிக்கையை உடனடியாக நிறுத்த நோட்டீஸ் வழங்கியதோடு மட்டும் இல்லாமல் சிவப்பு சீல் நாடாவை நிறுவி அந்தக் கடையை மூடியது. மேலும், உரிமம் பெற்ற உள்ளூர்வாசிகள் மட்டுமே வணிகங்களை நடத்த முடியும் என்ற வணிக விதிமுறைகளை மீறுவதைத் தடுக்க, சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் நகராண்மைக் கழகமும் காவல் துறையும் அடிக்கடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நெகிரி செம்பிலான் மாநில தொழில்முனைவோர், மனிதவள, வானிலை மாற்றம், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்ரமணியம் அழைப்பு விடுத்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் முதலாளிகள் அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து, அவர்கள் கட்டாயமாக்கப்பட்ட விதிமுறைகளை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.