கோலாலம்பூர், ஏப்ரல்.02-
X தளத்தில் ஒரு நபர் இனவெறி கருத்துகளைப் பதிவேற்றியது தொடர்பாக தேசிய ஒற்றுமை அமைச்சர் அலுவலகம் மலேசிய தகவல் தொடர்பு – பல்லூடக ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளது. 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு – பல்லூடக சட்டத்தின் பிரிவு 233 இன் படி அந்த நபர் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தாம் நம்புவதாக தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் கூறினார். மலேசிய மக்களின் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் தொடர்ந்து பாதுகாக்க தேசிய ஒற்றுமை அமைச்சு உறுதி பூண்டுள்ளது. எனவே, ஒற்றுமையைச் சீர்குலைத்து வெறுப்பைத் தூண்டும் எந்தவோர் அறிக்கையும் அல்லது செயலும் ஏற்றுக் கொள்ளப்படாது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் அனைவரும் நெறிமுறையாக இருக்க வேண்டும் மற்றும் இன, மத பதற்றங்களைத் தூண்டும் எந்தவொரு செயலையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் X தளத்தில் தனது பதிவின் மூலம் நினைவுபடுத்தினார்.