சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-
புத்ரா ஹைட்ஸ், நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களைச் சேர்ந்த 485 பேர் இன்று காலை வரை புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலின் பலநோக்கு மண்டபத்தில் உள்ள தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் 3 மணி முதல் பாதிக்கப்பட்டவர்களை சுபாங் ஜெயா சமூக நலத்துறை பெறத் தொடங்கினர். உணவு, உடை, படுக்கை வசதி உள்ளிட்ட தேவையான உதவிகளைப் பெற அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் இந்த மையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
தற்போது, புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசல் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்காலிகத் தங்குமிடம் தேவைப்படும் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதைய துயர் துடைப்பு மைத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெமிலியா மண்டபத்தில் உள்ள மற்றொரு தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவார்கள். இதற்கிடையில், கெமிலியா மண்டபத்தில் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 44 பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அரசு சாரா நிறுவனங்களிடம் இருந்தும் பொது மக்களிடமிருந்தும் உணவு, உடை போன்ற உதவிகளைப் பெறப்பட்டுள்ளன. மேலும், பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகத்தைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகள் லேசான காயமடைந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.