சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-
சுபாங் ஜெயா நிலத்தடி குழாய் வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் மலேசிய கல்வி அமைச்சு தலா 1,000 ரிங்கிட் உடனடி உதவியை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கவும், கல்வி ஊழியர்களின் நலனைத் தொடர்ந்து பாதுகாக்கவும் இந்த உதவி வழங்கப்படுவதாக அதன் அமைச்சர் பாஃட்லீனா சீடேக் தெரிவித்தார்.
இந்த உதவி துன் ஹுசேன் ஓன் ஆசிரியர் அறக்கட்டளை வாயிலாகவும் யாயாசான் டிடிக் நெகாரா அறக்கட்டளை வாயிலாகவும் வழங்கப்படுகிறது. இதில் பள்ளி உதவி உட்பட பிற உதவிகளும் அடங்கும் என்று இன்று காலை புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ளத் தற்காலிக துயர் துடைப்பு மையத்திற்கு சென்றபோது அவர் கூறினார். இந்த சம்பவத்தில் 23 பள்ளிகளைச் சேர்ந்த ஐந்து ஆசிரியர்களும் 102 மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு மாணவர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.