கோலாலம்பூர், ஏப்ரல்.02-
புத்ரா ஹைட்ஸ் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தில் தவறு ஏதும் நிகழ்ந்ததற்கான ஆதாரம் உள்ள பொதுமக்கள் போலீசாரின் விசாரணைக்கு உதவ முன் வருமாறு சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார். பேரளவில் சேதத்தையும் குடியிருப்புவாசிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ள அவ்வெடிப்புக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய முழுமையான துல்லிதமான விசாரணை தேவை. ஆதாரம் இருக்கும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவும் பட்சத்தில் அது அதிகாரத்துவ தரப்புகளுக்கு பேருதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
ஊராட்சி மன்றம் உட்பட மாநில அரசு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறது. அதே சமயம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பு, நலன், அவர்களுக்கான வசதிகள் ஆகியவற்றுக்கு மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கங்கள் முன்னுரிமை அளிக்கும் என அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
வெடிப்புச் சம்பவம் தொடர்பான முதல் கட்ட விசாரணை அறிக்கை 72 மணி நேரங்களில் சமர்ப்பிக்கப்படும் என அவர் நேற்று கூறியிருந்தார். மண் தோண்டும் பணிகளே வெடிப்புக்கான காரணம் எனக் கூறப்பட்டது குறித்து விசாரிக்கப்படும் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.