சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-
நேற்று புத்ரா ஹைட்ஸில் நேர்ந்த நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள், தீ விபத்தில் சேதமடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 5,000 ரிங்கிட் நிதியுதவி போதுமானதாக இல்லை என்று தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள், தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளின் அளவு இன்னும் கணக்கிடப்படவில்லை, ஆனால் உதவித்தொகை மிகவும் குறைவாக உள்ளது என்று அவர்கள் நம்புவதாகக் கூறினர். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உதவியை பாராட்டினாலும், வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை என்று நம்புகின்றனர். தாங்கள் இன்னும் வீட்டிற்குள் நுழையவில்லை, எனவே சேதம் எவ்வளவு பெரியது என்று தங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் 5,000 ரிங்கிட் நிச்சயமாகப் போதுமானதாக இருக்காது எனக் கூறினர்.
எரிவாயு குழாய் பல ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இல்லாமல் அந்த பகுதியில் இருந்தது. 15 ஆண்டுகளாக புத்ரா ஹைட்ஸில் வசிக்கும் செல்வம் சன்னாசி, நிதியுதவியுடன் கூடுதலாக, குடியிருப்பாளர்களுக்கு உடனடியாக மற்ற வடிவங்களில் உதவி தேவை என்றார். முக்கியமான ஆவணங்கள், மருந்துகள், அவசியமானப் பொருட்களை எடுக்க தாங்கள் இப்போது வீட்டிற்குச் செல்ல விரும்புகிறோம் என்று அவர் கூறினார். மேலும் குடியிருப்பாளர்களுக்கு உடனடியாகத் தற்காலிக தங்குமிடம் தேவை என்றும் கூறினார்.