நெருக்கடியை எதிர்கொள்ள மக்கள் ஒருவருக்கொருவர் தேவை

சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-

புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடித்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்துக் கோயிலும் இஸ்லாமிய பள்ளிவாசலும் கதவுகளைத் திறந்தன, நெருக்கடியை எதிர்கொள்ள மக்கள் ஒருவருக்கொருவர் தேவை என்பதை நிரூபிக்கிறது என்று Interfaith Spiritual Fellowship இன் தலைவர் அமீர் பாஃரிட் இஷாஹாக் கூறினார். இன – மத பேதத்தைப் பொருட்படுத்தாமல், கடினமான நேரத்தில் “நாம் அனைவரும் ஒரே குடும்பம், ஒருவருக்கொருவர் தேவை” என்பதை மக்கள் உணர்கிறார்கள் என்று அமீர் கூறினார். இந்துக் கோவில் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் முயற்சிகளையும், உதவிகளையும் எதிர்காலத்தில் இஸ்லாம் உட்பட பிற நம்பிக்கையைச் சேர்ந்த அன்பர்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நல்லெண்ணத்தையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். பிரச்சினைகள் குறித்து சண்டையிடுவதிலும் சச்சரவில் ஈடுபடுவதிலும் சக்தியை வீணாக்குவதற்குப் பதிலாக, வலுவான , அக்கறையுள்ள நல்லெண்ண சமூகத்தை உருவாக்க வேண்டும், மேலும் உண்மையாக ஒன்றிணைந்த நாட்டை நோக்கிப் பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நேற்று புத்ரா ஹைட்ஸை உலுக்கிய எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட 200 பேருக்கு தங்குமிடமாக ஸ்ரீ மகா காளியம்மன் கோயிலும், 323 பேருக்கு தங்குமிடமாக புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலும் மாறியுள்ளன. கடினமான காலங்களில் மலேசியர்கள் இன – மத வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைவார்கள் என்பதை இந்த தீ விபத்து மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது என்று ஒற்றுமை துறையின் முன்னாள் துணை அமைச்சர் தீ லியான் கேர் கூறினார். கடந்த 2021 இல் சிலாங்கூரை வெள்ளம் தாக்கிய போதும் கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் வெள்ளை கொடி பிரச்சாரத்தின் போதும் இதேபோன்ற ஒத்துழைப்பை அவர் நினைவு கூர்ந்தார்.

WATCH OUR LATEST NEWS