மலேசியாவிற்கு மீண்டும் சிறகை விரித்தது பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் – பயணிகளை வரவேற்றார் அமைச்சர் அந்தோணி லோக்

கோலாலம்பூர், ஏப்ரல்.02

உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், லண்டனுக்கும், கோலாலம்பூருக்கும் இடையிலான விமானச் சேவையை இன்று மீண்டும் தொடங்கியது.

லண்டன், ஹீத்ரோ விமான நிலையத்திற்கும், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையிலான பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், விமானச் சேவையின் வெள்ளோட்டத்தை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், அதிகாரப்பூர்வமாக வரவேற்றார்.

கோவிட் 19 க்கு பிறகு 2021 ஆம் ஆண்டு முற்பகுதியில் நிறுத்தப்பட்ட லண்டனுக்கும், கோலாலம்பூருக்கும் இடையிலான பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் சேவை, 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், கோலாலம்பூருக்கு மீண்டும் திரும்பியிருப்பது, மலேசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பயணத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, ஆசியான் நாடுகளில் பிற இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கான போக்குவரத்து மையமாக கேஎல்ஐஏவின் அந்தஸ்தை வலுப்படுத்தியுள்ளது என்று அந்தோணி லோக் வர்ணித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஏர்வேஸின் வருகை, மலேசியாவின் வான் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவில் முக்கிய பங்காளியான பிரிட்டனுடன் மலேசியாவின் தொடர்பை மேம்படுத்துகிறது என்று அந்தோணி லோக் கூறினார்.

“ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கேஎல்ஐஏவிற்கு பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் திரும்பியிருப்பதை மலேசியா வரவேற்கிறது.

இந்தப் பிராந்தியத்தின் ஒரு முக்கிய விமான போக்குவரத்து மையமாக மலேசியாவின் நிலையை பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

“இது , மலேசியாவின் வான் போக்குவரத்துத் துறையின் , வலுவான மீட்சித்தன்மையை நிரூபிப்பதாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் மலேசியாவிற்கான பயணிகளின் போக்குவரத்து, 100 மில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோலாலம்பூருக்கு, பிரிட்டிஷ் ஏர்வேய்ஸின் மீள் பிரவேசமானது, மலேசியாவின் முக்கிய வர்த்தக மற்றும் சுற்றுலா பங்காளிகளில் ஒருவரான பிரிட்டனுடனான இணைப்பையும், பிணைப்பையும் வலுப்படுத்தியுள்ளதாக கேஎல்ஐஏவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

முன்னதாக, 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானத்திற்கு மகத்தான வரவேற்பு நல்கப்பட்டது.

அந்த முன்னணி விமானத்தில் பயணம் செய்து, கோலாலம்பூரில் தரையிறங்கிய பயணிகளுக்கு அமைச்சர் அந்தோணி லோக்கும், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் பணியாளர்களும் பரிசுப் பைகளை வழங்கி வரவேற்றனர்.

கோலாலம்பூருக்கான பயணத்திற்கு பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், அதி நவீன விமானமான Boeing 787-9 Dreamliner- ரைப், பயன்படுத்துகிறது. இன்று புதன் கிழமை முதல் லண்டனுக்கும், கோலாலம்பூருக்கும் இடையில் நேரடி விமானச் சேவையை பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் அதிகாரப்பூர்வமாகத்ப் தொடங்கியுள்ளது.

WATCH OUR LATEST NEWS