பத்து பாஹாட், ஏப்ரல்.03
மலேசியர்களை மியன்மாருக்குக் கொண்டுச் சென்று, மனித வணிகத்தில் ஈடுபடுத்தியதாக இரண்டு மலேசியர்கள், ஜோகூர், பத்து பாஹாட் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
26 வயது வோங் ஜுன் வேய் மற்றும் 20 வயது ஜஸ்பர் யாப் என் வாய் என்ற அந்த இரு மலேசியர்கள், நீதிபதி அருண் நோவல் தாஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இவ்விருவரும் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பருக்கும், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.