பத்து பாஹாட், ஏப்ரல்.03-
இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு சிறிய விபத்து, வாய்ச் சண்டையாக மாறி, கைகலப்பில் முடிந்தது.
ஜோகூர், பத்து பாஹாட், ஆயர் ஹீதாமில் நேற்று மாலை 6.20 மணியளவில் நிகழ்ந்த இந்த கைகலப்பு தொடர்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக பத்து பாஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருலானுவார் முஷாடாட் அப்துல்லா சானி தெரிவித்தார்.
ஜாலான் பஹாகியா சாலையை, இரு வாகனங்களும் கடந்த போது, பக்கவாட்டுக் கண்ணாடி உரசியதைத் தொடர்ந்து இரு வாகனமோட்டிகளும் வாய்ச் சண்டையில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வாகனமோட்டி, தனது காரை உடனடியாக நிறுத்தாமல் சிறிது தூரம் சென்று வாகனத்தை நிறுத்தியதால் மற்றொரு வாகனமோட்டி ஆத்திரமுற்று, தகராற்றில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது என்று ஏசிபி ஷாருலானுவார் விவரித்தார்.