வழிபறிக் கொள்ளை, 12 வயது சிறுமி காயம்

புத்ராஜெயா, ஏப்ரல்.03

அடுக்குமாடி வீட்டின் கேட்டுக்கு அருகில் 12 வயது சிறுமியின் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட கொள்ளைச் சம்பவத்தில் அந்த சிறுமி காயமுற்றார்.

புத்ராஜெயா, பிரசின்ட் 11 இல் உள்ள அடுக்குமாடி வீட்டில் நேற்று காலை 9.45 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்த சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளதாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அய்டி ஷாம் முகமட் தெரிவித்தார்.

தலையில் தொப்பியும், பச்சை நிற ஜேக்கெட்டையும் அணிந்திருந்த அந்த நபர், இரும்புக் கேட்டைத் தட்டி, வீட்டில் தண்ணீர் வருகிறதா? இல்லையா? என்று கேட்டுள்ளார்.

பின்னர் தாம் கொண்டு வந்த காலி டப்பாவையும், ரப்பர் நீர் குழாயையும் காட்டி, தண்ணீர் நிரப்புவதற்கு உதவும்படி கூறி, நடித்துள்ளார்.

தன்னிடம் இருந்த ரப்பர் குழாயை, வீட்டில் உள்ள நீர் குழாயில் பொருத்தும்படி அந்த சிறுமியை அணுகியிருக்கிறார்.

அந்த சிறுமியும் வீட்டின் இரும்புக் கேட்டைத் திறக்காமலேயே தண்ணீர் நிரப்புவதற்கு அந்நபருக்கு உதவியுள்ளார். பின்னர் ரப்பர் குழாயை ஒப்படைப்பதற்கு அச்சிறுமி கேட்டிற்கு அருகில் வந்துள்ளார்.

அப்போது சிறுமியின் கழுத்தைப் பிடித்த அந்த நபர், கழுத்திலிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியுள்ளார் என்று அய்டி ஷாம் கூறினார்.

அந்த நபருடன், போராடியதில் சிறுமிக்கு தாடைப் பகுதியில் சீராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் நிகழும் போது, வீட்டில் அந்த சிறுமி தனது தாயாருடன் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமரா பதிவின் மூலம் கொள்ளையன் அடையாளம் காணப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS