ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.03-
பினாங்கு இந்து அறப்பணி வாரியம், பாகான் டாலாம், ஜாலான் சிராமில் உள்ள இந்து இடுகாட்டில் மின்சுடலை ஒன்றை கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்த அறப்பணி வாரியத்தின் ஆணையரும்,பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான குமரன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்குச் சொந்தமான இடுகாட்டு நிலத்தில் மின்சுடலை நிர்மாணிப்பற்கான செலவு, , கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய தலைவர்களுடன் நடத்தப்பபட்ட சந்திப்பின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குமரன் குறிப்பிட்டார்.
தொடக்க கட்டமாக, இந்த மின்சுடலை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்வதற்கு CSK Services Sdn. Bhd. நிறுவனத்தைச் சேர்ந்த டத்தோ டாக்டர் Ts. சிவகுமாரை இந்து அறப்பணி வாரியம் நியமித்துள்ளதாக குமரன் தெரிவித்தார்.
இந்த ஆய்வைத் தொடர்ந்து பினாங்கு சுற்றுச்சூழல் இலாகாவிடமிருந்து அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு இன்றைய தேதியிலிருந்து கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக பினாங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் குமரன் தெரிவித்தார்.
மேலும் ஆலோசனை நிறுவனத்திடமிருந்து முழுமையான அறிக்கையைப் பெற்ற பிறகு, இந்தத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்குத் தொடர்வதற்கு பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளப்படும்.
மின் சுடலையின் கட்டுமானமும், எரியூட்டியை நிறுவும் பணிகளும் முடிவடைவதற்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகலாம். அதன் பின்னர், மின் சுடலை முழுமையாக செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குமரன் குறிப்பிட்டடார்.
பினாங்கு மாநிலத்தில் உள்ள இந்து சமூகத்திற்கான இந்த மிக முக்கிய திட்டத்தை நிறைவேற்றுவதில் மிகுந்த அக்கறையும், ஆதரவையும் நல்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு இவ்வேளையில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக குமரன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.