ஷா ஆலாம், ஏப்ரல்.03-
அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரியை உயர்த்தியிருக்கும் அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கும் மலேசியா பரஸ்பர வரியை உயர்த்த வேண்டும் என்று அம்னோ கோரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய நாடுகள் உட்பட 180 நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பரஸ்பர வரி விகிதத்தை நேற்று அறிவித்துள்ளார்.
இதில் மலேசியப் பொருட்களுக்கு அவர் 24 விழுக்காடு பரஸ்பர வரியை அறிவித்துள்ளார். WTO எனப்படும் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்ப அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மலேசியா கூடுதல் பரஸ்பர வரியை விதிப்பதற்கான உரிமையை கொண்டுள்ளது என்று அம்னோ இளைஞர் பிரிவு செயலாளர் ஹாபிஃஸ் அரிபிஃன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை என்றால் அமெரிக்கப் பொருட்களுக்கு மலேசியா கூடுதல் வரியை விதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.