ஷா ஆலாம், ஏப்ரல்.03-
புத்ரா ஹைட்ஸ், எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தினால் ஏற்பட்ட மோசமான தீச் சம்பவம் குறித்து விவாதிப்பதற்கு சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கு இது சரியான தருணம் அல்ல என்று மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இந்த தீச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உதவுவதும், அவர்களின் பிரச்னையைக் கண்டறிவதும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழி வகைகளை ஆராய்வதும், தற்போது முக்கியமே தவிர விவாதங்களை நடத்துவது முக்கியம் அல்ல என்று மந்திரி பெசார் தெளிவுப்படுத்தினார்.
புத்ரா ஹைட்ஸ் தீச் சம்பவத்திற்கானக் காரணத்தை ஆராய்வதற்கு சிறப்பு சட்டமன்றக் கூட்டம், அவசரமாக கூட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அளித்து வரும் நெருக்குதல் குறித்து கருத்துரைக்கையில் அமிருடின் ஷாரி இதனைத் தெரிவித்தார்.
தீச் சம்பவத்திற்கு அரசியல் முலாம் பூச வேண்டாம் என்று எதிர்க்கட்சியினரைக் கேட்டுக் கொண்ட அமிருடின் ஷாரி, முதலில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் மாநில அரசு இருப்பதாக விளக்கினார்.