சிரம்பான், ஏப்ரல்.04-
நெகிரி செம்பிலான், ஜெலுபு, ஜாலான் புக்கிட் தங்கா – சிரம்பான் சாலையின் வனப்பகுதியில், லோரியை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி, சற்று ஒதுங்க முற்பட்ட அதன் ஓட்டுநரைச் சிறுத்தை ஒன்று தாக்கியதில் கடும் காயங்களுக்கு ஆளாகினார்.
நேற்று மாலை 6 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 50 வயது லோரி ஓட்டுநர் காயத்திற்கு ஆளாகினார். லோரி ஓரத்தில் நின்று கொண்டு இருந்த அந்த நபரை, சிறுத்தை ஒன்று தாக்கும் காட்சியை, அந்த சாலையைப் பயன்படுத்திய வாகனமோட்டி ஒருவர் , தனது காரின் டேஷ் போர்ட் கேமராவில் பதிவு செய்துள்ளார்.
அந்த காணொளியின் பதிவேற்றம் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான், வனவிலங்கு, தேசியப் பூங்கா இயக்குநர் பைஃசால் இஸாம் பிக்ரி தெரிவித்தார்.
அந்த சிறுத்தை அருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து சாலையைக் கடக்க முற்பட்ட போது, அந்த லோரி ஓட்டுநரைத் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கீழே விழுந்த அந்த லோரி ஓட்டுநரை, அச்சாலையைக் கடந்த வாகனமோட்டிகள் காப்பாற்றியுள்ளனர். அவர் தற்போது சிரம்பான், துவாங்கு ஜாபார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் PERHILITAN தனது கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக பைஃசால் தெரிவித்தார்.