சுபாங் ஜெயா, ஏப்ரல்.04-
புத்ரா ஹைட்ஸ் தீச் சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு முதல் கட்டமாக அனுமதிக்கப்பட்ட 80 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பலர், தங்கள் வீடுகளின் நிலை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
தங்கள் வீடுகள் அலங்கோலமாகக் காட்சி அளிப்பதைக் கண்டு சிலர் கண்ணீர் வடித்தனர். எரிவாயுக் குழாய் வெடித்து தீ பரவியதால் வீடு முழுவதும் சாம்பல் நிரம்பி, மேடு தட்டியுள்ளது. வீடு முழுக்க பொருட்கள் அழிந்து, பொசுங்கி வாடையும், துர்நாற்றமும் வீசத் தொடங்கியுள்ளன.
இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லாததால் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் கெட்டுப் போயிருந்தன. பலரது வீடுகளில் ஹரிராயா பலகாரங்கள் மேஜை மீது வைக்கப்பட்டிருந்தபடியே இருந்தன. அவை சாம்பலால் மூடப்பட்டு இருந்தன.
நாளை சனிக்கிழமை திறந்த இல்ல உபசரிப்பு நடத்துவதற்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் கெட்டுப் போயிருந்தன. சிலரது வீடுகளில் உஷ்ணம் காரணமாக சுவரில் வெடிப்பு காணப்பட்டு இருந்தன.
வீடு இருக்கும் நிலைமையைப் பார்க்கும் போது, இவ்வளவு அலங்கோலமான சூழ்நிலையில், தங்களால் அந்த வீடுகளில் தொடர்ந்து குடியிருக்க முடியுமா? என்ற சந்தேகமே மேலோங்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
பலர், தங்கள் வீடுகளில் இப்போது தங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். வீடுகளை அரசாங்கம் சீரமைத்துக் கொடுத்த பின்னரே அந்த வீடுகளில் தொடர்நது குடியிருக்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்ய இயலும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொருக்கும் சராசரி ஒரு மில்லியனிலிருந்து 2 மில்லியன் ரிங்கிட் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.