குளுவாங், ஏப்ரல்.04-
தாங்கள் பயணம் செய்த காரை, பின்புறத்தில் மோதி விட்டார் என்பதற்காக பேருந்து ஓட்டுநர் ஒருவருடன் வாய்த் தகராற்றில் ஈடுபட்டு, அவரை கண்மூடித்தனமாகத் தாக்கியதாக நம்பப்படும் இருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 58.5 ஆவது கிலோ மீட்டரில் குளுவாங் அருகில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பிலான காணொளியை அடிப்படையாகக் கொண்டு ஆராயப்பட்டதில் சம்பந்தப்பட்ட அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகள், அந்த பேருந்து ஓட்டுநரை அடித்துக் காயப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இரண்டு வெவ்வேறு தரப்பினரிடரிமிருந்து தாங்கள் இரண்டு போலீஸ் புகார்களைப் பெற்றுள்ளதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் நோ தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து புலன் விசாரணை செய்யப்பட்டு வரும் வேளையில் இதனை நேரில் பார்த்தவர்கள், புலன் விசாரணைக்கு உதவும்படி ஏசிபி பாஹ்ரேன் கேட்டுக் கொண்டுள்ளார்.