கோலாலம்பூர், ஏப்ரல்.04-
கடந்த 1981 முதல் 2003 வரை நாட்டின் பிரதமராக இருந்தபோது, இரும்புக்கரம் கொண்ட ஆட்சியாளராகத் தனது எதிர்ப்பாளர்களால் விமர்சிக்கப்பட்ட துன் டாக்டர் மகாதீர் முகமது, தற்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிப்பதாக இன்று தனது முகநூலில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
துன் மகாதீர் வரும் ஜூன் மாதம் 100 வயதை எட்டவுள்ளார். இந்நிலையில், இரண்டாம் உலகப் போரை நினைவுகூர்ந்த துன் மகாதீர், தன்னால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டு, தற்போது “ஒற்றுமை அரசாங்கத்தை” வழிநடத்துவதாகக் கூறும் அன்வாருக்கு எதிராக மீண்டும் தாக்குதலைத் தொடுக்கத் தொடங்கியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் நாயகனாக பார்க்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தம்முடைய ஆட்சிக் காலத்தில் ஒரு கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்தினார்.
வின்ஸ்டன் சர்ச்சில் ஆட்சி தலைமைத்துவத்திற்கும், போர் வியூகத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தது. அவரின் ஆட்சி, எதிர்க்கட்சிகள் உட்பட மாறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்ட பல்வேறு அரசியல் கட்சிகளை உள்ளடக்கியிருந்தது.
வின்ஸ்டன் சர்ச்சிலின் கூட்டணி ஆட்சி என்றால் அதுவும் ஓர் ஒற்றுமை அரசாங்கமாக அமைந்திருந்தது. சர்ச்சில் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, கிலமண்ட் அட்லீ தலைமையிலான தொழிலாளர் கட்சி மற்றும் ஆர்சிபால் சின்க்ளேர் தலைமையிலான லிபரல் கட்சி என அனைத்து கட்சிகளும் ஒற்றுமை அரசாங்கத்தில் அமைச்சரவையில் அமர்ந்தன.
கிலமண்ட் அட்லீ துணைப் பிரதமராகவும், ஆர்சிபால் சின்க்ளேர் விமானப் பிரிவு அமைச்சராகவும் பொறுப்பேற்று இருந்தனர்.
எனவே, அமைச்சரவை முடிவுகளைக் கூட்டணி அரசாங்கத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து எடுத்தன. அந்தக் கட்சிகள் கன்சர்வேடிவ் கட்சிக்கோ அல்லது பிரதமருக்கோ விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. அவர்களின் விசுவாசம் நாட்டுக்கு மட்டுமே இருந்தால் போதுமானது என்ற நிலை இருந்தது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
ஆனால், அந்த கொள்கைக்கு நேர்மாறாக, அன்வாரின் “ஒற்றுமை அரசாங்கத்தின்” கொள்கைகள் உள்ளன என்று துன் மகாதீர் குற்றஞ்சாட்டினார்.
பிரதமரை விமர்சிப்பது என்பது தண்டனை நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்பது போல் உள்ளது. பிரதமரை ஆதரிக்காத எம்.பி.க்களின் கட்சிகள் அரசாங்கத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. தனக்கு ஆதரவாக இருக்கின்ற எம்.பி.க்கள் மற்றும் கட்சிகளுக்கு மட்டுமே தனது ஆதரவு என்ற நிலையில் அன்வார் செயல்படுகிறார்.
இது உண்மையிலேயே ஒற்றுமை அரசாங்கம் என்று கூறப்படுவது, முற்றிலும் கேள்விக்குறியாக உள்ளது என்று துன் மகாதீர் தனது முகநூலில் விமர்சனம் செய்துள்ளார்.