மான்செஸ்டர், ஏப்ரல்.04-
மான்செஸ்டர் சிட்டி மத்தியத் திடல் ஆட்டக்காரர் கெவின் டி ப்ரூய்ன் இப்பருவ இறுதியில் அந்த பிரீமியர் லீக் கிளப்பை விட்டு வெளியேறுவார் எனக் கூறப்படுகிறது. டி ப்ரூய்ன் 2015 ஆம் ஆண்டு ஜெர்மன் அணியான விஎஃப்எல் வுல்ஃப்ஸ்பர்க்கில் இருந்து சிட்டியில் இணைந்ததிலிருந்து 16 கிண்ணங்களை வென்றுள்ளார். இதில் ஆறு பிரீமியர் லீக் பட்டங்கள் மற்றும் 2023 இல் சாம்பியன்ஸ் லீக் ஆகியவை அடங்கும். அவர் இரண்டு முறை பிரீமியர் லீக்கின் சிறந்த வீரராகவும் பெயரிடப்பட்டுள்ளார்.
“மான்செஸ்டர் சிட்டி வீரராக இவை எனது கடைசி மாதங்கள் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன். இதைப் பற்றி எழுதுவது எளிதல்ல, ஆனால் கால்பந்து வீரர்களாக, இத்தகைய நாள் வரும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்,” என்று டி ப்ரூய்ன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
டி ப்ரூய்னின் ஒப்பந்தம் இப்பருவ இறுதியுடன் முடிவடையும் என்பதால், கிளப்பில் அவரது எதிர்காலம் குறித்து பல மாதங்களாக ஊகங்கள் இருந்து வந்தன.
பிரீமியர் லீக் வரலாற்றில் மிகச் சிறந்த மத்தியத் திடல் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் டி ப்ரூய்ன், சிட்டியின் வெற்றிக்கு மையமாக இருந்துள்ளார். ஆனால் அண்மைய பருவங்களில் அவர் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
“மான்செஸ்டர் சிட்டி கெவின் டி ப்ரூய்னின் ஒப்பந்தம் காலாவதியாகும் போது அவருக்கு உணர்ச்சிபூர்வமான பிரியாவிடை அளிக்கும்” என்று சிட்டி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பின்னடைவு மற்றும் முழு உடற்தகுதியை மீண்டும் பெறுவதில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக ஓரங்கட்டப்பட்ட டி ப்ரூய்ன் இந்த பருவத்தில் 20 லீக் போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக, அவர் அனைத்து போட்டிகளிலும் கிளப்பிற்காக 413 போட்டிகளில் விளையாடியுள்ளார். 106 கோல்களை அடித்துள்ளார். 174 கோல்களைப் புகுத்த உதவியுள்ளார்.