தெலுக் இந்தான், ஏப்ரல்.04-
தேசியப் பள்ளிகளைப் போலவே தாய்மொழிப்பள்ளியான சீனப்பள்ளிகளும், அவற்றின் மாணவர்களும் தேசப்பற்றையும், தங்கள் தாய் நாட்டின் மீது மிகுந்த விசுவாசத்தையும் கொண்டுள்ளனர் என்று தெலுக் இந்தான் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பாசீர் பெடாமார் பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு தாம் கலந்துகொண்ட ஒரு பள்ளி நிகழ்ச்சியில் இணைந்து பாடப்பட்ட பேராக் மாநில கீதம் தொடர்பில் சில தரப்பினர் பிரச்னையை எழுப்ப முயற்சி செய்ததைக் கண்டு தாம் வருத்தம் கொண்டதாக வூ கா லியோங் குறிப்பிட்டார்.
குறிப்பாக, சீனப்பள்ளி மாணவர்கள், தேசிய கீதத்தைச் சீனமொழியில் பாடுகின்றனர் என்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும், அவதூறுகளும் கட்டவிழ்க்கப்பட்டன. இத்தகைய குற்றச்சாட்டுகளைத் தாம் முற்றாக நிராகரிப்பதாக வூ கா லியோங் தெரிவித்தார்.
தேசியப் பள்ளிகளைப் போலவே, தேசிய வகை சீனப் பள்ளிகளும், அனைத்து மாணவர்களிடையேயும் தேசப்பற்றையும், சொந்த நாட்டின் மீதான விசுவாச உணர்வையும் வளர்த்து வருகின்றன.
எனவேதான் பேரா மாநிலத்தில் அனைத்து பள்ளி மாணவர்களும் எந்தவொரு நிகழ்ச்சியிலும், தேசிய கீதம் மற்றும் மாநில கீதம் ஆகிய இரண்டையும் பாடி வருகின்றனர்.
ஆனால், சீனப்பள்ளி மாணவர்களுக்கு எதிராக அவதூறு கூறி வருகின்றவர்கள், அவர்களின் பொது அறிவை மேம்படுத்திக் கொள்வதைத் தாம் வரவேற்பதாக வூ கா லியோங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பேராக் மாநில குடிமகனாகத் தாம், பேராக் தேசிய கீதத்தைப் பாடும்போது மிகவும் பெருமைப்படுவதாக வூ கா லியோங் குறிப்பிட்டார்.
அதே வேளையில் எந்தப் பள்ளி என்பதைப் பொருட்படுத்தாமல், இப்போது அனைத்து மாணவர்களும் தேசிய கீதத்துடன் பேரா மாநில கீதத்தையும் பாடுவதைப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது.
மாணவர்கள் மத்தியில் அரசியல் வெறுப்பைத் தூண்டுவதற்கு பதிலாக மலேசியக் குடிமை உணர்வை வளர்க்க முயற்சிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தரப்பினரைத் தாம் கேட்டுக் கொள்வதாக வூ கா லியோங் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.