கோலாலம்பூர், ஏப்ரல்.04-
கோலாலம்பூர், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் ஒரு பலூன் வியாபாரிக்கும், கோலாலம்பூர் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த பலவந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மூன்று விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளனர்.
இந்த மூன்று அறிக்கைகளில் இரண்டு, மேல் நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையக குற்றப்புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் டத்தோஶ்ரீ முகமட் ஷுஹாய்லி முகமட் ஸையின் தெரிவித்துள்ளார்.
அரசு பணியாளரைக் கடமையாற்ற விடாமல் இடையூறு விளைவித்தது மற்றும் வேண்டுமென்றே காயம் விளைவித்துக் கொண்டது என்ற அடிப்படையில் இவ்விவகாரம் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட பலூன் வியாபாரிக்கு போதைப்பொருள் தொடர்புடைய 13 குற்றப்பதிவுகள் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இது போன்ற விவகாரங்களில் கருத்துரைப்பதில் பொதுமக்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு விட வேண்டாம் என்றும், முதிர்ச்சியுடன் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் முகமட் ஷுஹைய்லி கேட்டுக் கொண்டார்.