சுபாங் ஜெயா, ஏப்ரல்.04-
நிலத்தடி எரிவாயு குழாய் வெடி விபத்து நடப்பதற்கு முன்னதாக, அப்பகுதியில் மண் தோண்டும் பணிகள் நடைபெற்றுள்ளன என்று புத்ரா ஹைட்ஸ் கோரத் தீ விபத்து குறித்து மேற்கொள்ளப்பட்ட பூர்வாங்க விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஏப்ரல் முதல் தேதி வெடி விபத்து நிகழ்வதற்கு முன்பு, தீச் சம்பவம் ஏற்பட்டட மையப் பகுதியில், நிலத்தடி சாக்கடை குழாய்களை மாற்றும் நோக்கில் கிட்டத்தட்ட 30 மீட்டர் தூரத்தில் மண் தோண்டும் பணிகள் நடைபெற்றுள்ளன என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
இந்த மண் தோண்டும் பணிகள் கடந்த மார்ச் 30 ஆம் தேதி நிறுத்தப்பட்டுள்ளன. மண் தோண்டுவதற்கு Backhoe மற்றும் Excavator ஆகிய இரண்டு மண்வாரி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஹுசேன் ஓமார் இதனைக் குறிப்பிட்டார்.
இவ்விரண்டு மண் இயந்திரங்களில் ஒன்று, வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் ஆழமாக இறங்கி, நிலைக் குத்தியிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த மண் தோண்டும் பணிகளில் ஈடுபட்ட குத்தகையாளர்கள், துணை குத்தகையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதன் தொடர்பில் நிலத்தடி எரிவாயு வெடி விபத்துக்கும், மண் தோண்டும் பணிக்கும் நேரடி தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக விபத்துக்கான பூர்வாங்க விசாரணை அறிக்கையின் முடிவை அறிவித்த போது டத்தோ ஹுசேன் ஓமார் இதனைத் தெரிவித்தார்.
தோண்டப்பட்ட குழியின் ஆழம், நிலத்தடி எரிவாயு குழாய் பாயும் இடத்திற்கு உள்ள இடைவெளி தூரம், வெடி விபத்து ஏற்பட்டதற்கான சாத்தியக் கூறுகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக டத்தோ ஹுசேன் ஓமார் குறிப்பிட்டார்.