கோலாலம்பூர், ஏப்ரல்.04-
கூகுள் மற்றும் வேஸ்ஃ வரைப்படங்களில் இந்து ஆலயங்கள் சட்டவிரோதமானவை என்று முத்திரைக் குத்தப்பட்டு இருப்பது தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார்.
இணைய அலைவரிசையைத் தவறாக பயன்படுத்தியிருப்பது தொடர்பில் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 588 ஆவது பிரிவின் கீழ் இவ்விவகாரம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அயோப் கான் குறிப்பிட்டார்.
இதில் நிந்தனைத்தன்மையிலான அம்சங்கள் இருக்குமானால், நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று துணை ஐஜிபி தெரிவித்தார்.
எனினும் நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதா? என்பது அதன் உள்ளடக்கத்தைப் பொறுத்ததாகும் என்று அயோப் கான் விளக்கினார்.
கூகுள் வரைப்படத்தில் இந்து ஆலயங்கள் சட்டவிரோதமானவை என்று முத்திரைக் குத்தப்பட்டது தொடர்பில் அந்த வார்த்தையை அகற்றுவதற்கு, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஒத்துழைப்பு நல்குமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை உரிமை கட்சியின் துணைத் தலைவர் டேவிட் மார்ஷல் அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்து கோவில்கள் சட்டவிரோதமானவை என்று கூறி, அந்த வழிபாட்டுத் தளங்கள் தொடர்பில் முகநூலில் விமர்சனம் செய்த கும்பல் ஒன்றை தொடர்பு, பல்லூடக ஆணையம் விசாரணைக்கு அழைத்த சில நாட்களுக்கு பிறகு இந்த சர்ச்சை எழுந்தது.
குறிப்பாக, கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் நில விவகாரம் பூதாகரமாக வெடித்த போது, இந்து கோவில்கள் சட்டவிரோதமானவை என்று கும்பல் ஒன்று முகநூலில் செய்த விமர்சனத்தைத் தொடர்ந்து கூகுள் மற்றும் வேஸ்ஃ வரைப்படத்தில் அத்தகைய முத்திரைக் குத்தப்பட்டுள்ளது.