பத்தாங் காலியில் நிகழ்ந்த படுகொலை : பிரிட்டன் வருத்தம், அரசு சார்பு நிறுவனம் வரவேற்பு

கோலாலம்பூர், ஏப்ரல்.05-

சிலாங்கூர், பத்தாங் காலியில் 77 ஆண்டுகளுக்கு முன்பு, 24 பால்மர வெட்டுத் தொழிலாளிகள், பிரிட்டிஷ் இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் வருத்தம் தெரிவித்து இருப்பதை அரசாங்க சார்பற்ற அமைப்பு ஒன்று வரவேற்றது.

கடந்த 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் பத்தாங் காலி, சுங்கை ரிமோ தோட்டத்தில் கம்யூனிஸ்டுகாரர்கள் என்று கூறி, அப்பாவி பால்மர வெட்டுத் தொழிலாளிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தார்மீகப் பொறுப்பை ஏற்கவும், வருத்தத்தைத் தெரிவிக்கவும், பிரிட்டன் இதுநாள் வரை மறுத்து வந்தது.

எனினும் ஆண்டுகள் பல, உருண்டோடினாலும் 1948 ஆம் ஆண்டு நிகழ்ந்த அந்த கொடூரச் சம்பவத்திற்கு, கடைசியில் பிரிட்டன் தனது வருத்தத்தை பதிவு செய்து இருப்பது, நீதிக்குக் கிடைத்த வெற்றியாகவேக் கருதப்படுகிறது என்று பத்தாங் காலி படுகொலை எதிர்ப்பு இயக்கம் தெரிவித்தது.


கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியிடப்பட்ட கடிதத்தின்படி இந்த சம்பவத்திற்கு தனது வருத்தத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் பதிவு செய்து இருப்பதாக அதன் இந்தோ –பசிபிக் நாடுகளுக்கான அதன் இணை அமைச்சர் கெத்ரின் வெஸ்ட் தெரிவித்து இருந்தார்.

இந்த படுகொலையானது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறாத் துயரை ஏற்படுத்திய ஒரு சோக வரலாறாகும் என்பதை பிரிட்டன் ஒப்புக் கொண்டது.

உயிரிழந்தவர்கள், அரசு எதிர்ப்பாளர்கள் என்ற ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தி கட்டுக்கதை உருவாக்கப்பட்டு இருந்ததை பிரிட்டன் ஒப்புக் கொண்டது.

பிரிட்டனின் இந்த கடிதம், மிக கவனமான தயார் செய்யப்பட்டு இருந்த போதிலும் இழப்பீடுகள் பற்றி அது எதுவும் குறிப்பிடவில்லை. எனினும் அது தனது வருத்தத்தைப் பதிவு செய்து இருப்பது மூலம், அச்சம்பவத்தில் உண்மையிலேயே அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை உறுதிச் செய்துள்ளது.

இருப்பினும் இந்த கொலையில் உயிர் நீத்த அந்த 24 பால்மர வெட்டுத் தொழிலாளர்கள் நினைவாக பத்தாங் காலியில் ஒரு ஞாபகார்க்தச் சின்னத்தை பிரிட்டன், நிறுவ வேண்டும் என்று என்று அந்த அரசாங்க சார்ப்பற்ற அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

வரலாற்றுக் காயங்களை குணப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு படியாக பிரிட்டன் வழங்கிய இந்த அங்கீகாரத்திற்காகத் தாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாக அந்த அரசு சாரா இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS