ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.05-
பினாங்கு வாழ் இந்துக்களின் கோவில்கள், இடுகாடுகள், இந்து நலன் சார்ந்த சொத்துக்கள் மற்றும் கட்டடங்களை நிர்வகித்து வரும் பழம் பெரும் அமைப்பான பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமைத்துவத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமை ஆணையராக இருந்து வரும் ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர், கடந்த மாதம் நடைபெற்ற ஜசெக தேர்தலில் தோல்விக் கண்டதைத் தொடர்ந்து இந்து அறப்பணி வாரியத்தின் தலைமைத்துவத்தில் அதிரடி மாற்றங்கள் நடைபெறவிருப்பதாக ஆருடங்கள் வலுத்து வருகின்றன.
எனினும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நடப்பு தலைமைத்துவ வரிசையில் எந்த மாற்றமும் இருக்காது என்று முதலமைச்சரின் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின் வழி உறுதிப்படுத்தியுள்ளது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தில் தலைமைத்துவப் பொறுப்பில் இருப்பவர்களின் பதவிக்காலம் வரும் ஜுலை மாதம் முடிவடைகிறது. அது வரையில் அந்த வாரியத்தின் நடப்பு பொறுப்பாளர்கள் வரிசையில் மாற்றம் ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முதலமைச்சர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி நடப்பு தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் டாக்டர் லிங்கேஸ்வரன் மற்றும் இதர ஆணையர்கள் அனைவரும் தங்கள் பொறுப்பில் நிலை நிறுத்தப்படவிருக்கின்றனர்.
அதே வேளையில் இந்து அறப்பணி வாரியத்தின் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்வதற்கான எந்தவொரு விவாதமும், ஆட்சிக்குழு கூட்டத்தில் நடைபெறவில்லை என்பதையும் முதலமைச்சரின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 1906 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சட்டத்தின் கீழ், ஓர் ஆணையரின் கூடிய பட்ச பதவிக்காலம் இரண்டு தவணை அல்லது 2 ஆண்டுகளாகும். பினாங்கு ஆளுநரால், பதவிக் காலம் நீட்டிக்கப்படாத வரையில் அவர்கள் இரண்டு தவணைக் காலம் மட்டுமே பதவி வகிக்க முடியும்.
அந்த வகையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் 13 ஆணையர்களில் ஒருவராக RSN ராயர், கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து சேவையாற்றி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு அந்த ஆணைத்தின் தலைவராக ராயர் நியமிக்கப்பட்டார்.