கோலாலம்பூர், ஏப்ரல்.05-
கோலாலம்பூருக்கு அருகே சுங்கை பூலோ, ஜாலான் கம்போங் பாருவில் இன்று பிற்பகலில் மூன்று தொழிற்சாலைகளில் நிகழ்ந்த தீ விபத்தில் அந்நிய நாட்டவரான தொழிலாளர் ஒருவர் கடும் தீக்காயங்களுக்கு ஆளானார்.
இத்தீச் சம்பவம் தொடர்பாக பிற்பகல் 1.41 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
சுங்கை பூலோ, புக்கிட் ஜெலுதோங், டாமான்சாரா மற்றும் செலாயாங் ஆகிய 4 நிலையங்களைச் சேர்ந்த 10 தீயணைப்பு வண்டிகளுடன் 31 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் காயமுற்ற வங்காதேச ஆடவர் ஒருவர், சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மூன்று தொழிற்சாலைகளில் கொழுந்து விட்டு எரிந்த தீ, பிற்பகல் 2.51 மணிக்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாக முக்லிஸ் மொக்தார் குறிப்பிட்டார்.