சுபாங் ஜெயா, ஏப்ரல்.05-
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்திற்குக் காரணமான நிறுவனம் என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ள மண் தோண்டும் பணியில் ஈடுபட்ட நிறுவனத்தைத் தாம் பாதுகாக்க முயற்சி செய்வதாகக் கூறப்படுவதை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி வன்மையாக மறுத்துள்ளார்.
வெடி விபத்து நிகழ்ந்த எரிவாயு குழாய் பொருத்தப்பட்ட இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைவில் சம்பந்தப்பட்ட நிறுவனம், இரண்டு மண் வாரி இயந்திங்களின் உதவியுடன் சாக்கடைக் குழாய்களை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் தற்போது வறுத்து எடுக்கப்பட்டு வந்தாலும், சம்பந்தப்பட்ட மண் தோண்டும் பணிகளை மேற்கொண்ட நிறுவனம் தொடர்பில் அதனை மூடி மறைக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்பதையும் அமிருடின் ஷாரி தெளிவுபடுத்தினார்.