சதிவேலையில் சம்பந்தப்பட்டுள்ளேனா? குற்றச்சாட்டை மறுத்தார் பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.05-

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் விவகாரம் தொடர்பிலான சதித் திட்டத்தில் ஒரு பகுதியாக தாம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, இன்று வன்மையாக மறுத்துள்ளார்.

லைட் ஹோட்டல் சதி என்று கூறும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஓர் அடிப்படையற்ற செய்தியில் தமது பெயரைத் தொடர்புப்படுத்தியிருப்பது, அவதூறு தன்மையில் தீங்கிழைக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு விளக்கினார்.

அந்த செய்தியில், இன்று பினாங்கில் உள்ள லைட் ஹோட்டலில் ஒரு டான்ஸ்ரீ மற்றும் மூன்று டத்தோஸ்ரீ ஆகியோர் அடங்கிய குழுவினர் ரகசியக் கூட்டத்தை நடத்தியதாகவும், சுந்தராஜுவை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராகக் கொண்டு வரவும், செனட்டர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரனை வாரியத்தின் துணைத் தலைவராக நியமிக்கவும் முயற்சிகள் நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அந்த செய்தியை எழுதிய ஆசிரியர், ஜசெக உறுப்பினரான சுந்தராஜு, இந்த ரகசிய அதிகாரச் சித்து விளையாட்டின் மூலம் தனது கட்சியைச் சேர்ந்தவருக்கே துரோகம் இழைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு ஓர் அறிக்கை வாயிலாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தொடர்பான ரகசியக் கூட்டத்திலேயோ அல்லது அரசியல் சதித் திட்டத்திலோ தாம் சம்பந்தப்படவில்லை என்றும், இது ஆதாரமற்றக் குற்றச்சாட்டு என்றும் தமது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்றும் டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

தனது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ள தரப்பினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தாம் பரிசீலனை செய்து வருவதாக பிறை சட்டமன்ற உறுப்பினரான சுந்தராஜு தெரிவித்துள்ளார்.

தற்போது பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக இருக்கும் ஜெலுத்தோங் எம்.பி. RSN பதவி தவணைக் காலம் வரும் ஜுலை மாதம் முடிவடையவிருக்கும் பட்சத்தில், பினாங்கு துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ அந்தப் பதவிக்குத் தலைமையேற்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படும் சர்ச்சை தொடர்பில் டத்தோஸ்ரீ சுந்தராஜு பெயரும் அடிப்படுவதாகக் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS