அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி மலேசியாவின் பொருளாதாரத்தில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தலாம் – பிரதமர் கூறுகிறார்

ஆயர் குரோ, ஏப்ரல்.05-

மலேசியாவிற்கு எதிராக அதன் இறக்குமதி பொருட்களுக்கான வரியை 24 விழுக்காடாக உயர்த்திய அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தின் முடிவு, மலேசியாவின் பொருளாதாரத்தில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார்.

வரியை உயர்த்தியிருக்கும் அமெரிக்காவின் இந்த முடிவு, மலேசியாவிற்கு மட்டுமின்றி இதர நாடுகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் பிராந்திய பொருளாதார உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து ஆசியான் நாடுகளின் மனப்பான்மையும் ஒருமித்த குரலோடு எழுச்சி பெற வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார்.

பிரதமரின் கூற்றுப்படி, மலேசியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள வரி விகித விவகாரத்தில் நாட்டின் மீதான பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து நேற்று நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சில தாக்கங்கள் ஏற்படுத்தும் என்பதை தாம் மறுக்கவில்லை என்று பிரதமர் தெரிவித்தார்.

49 நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விகிதத்தினால் நேற்று உலகம் முழுவதும் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. மலேசியா, ஜப்பான், தென் கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளின் பங்குச் சந்தையில் இதன் தாக்கம் எதிரொலித்தது.

இப்பிரச்னையைக் களைய ஆசியானின் ஒட்டுமொத்தப் பலமும் பிரயோகிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS