சுபாங் ஜெயா, ஏப்ரல்.06-
சிலாங்கூர் அரசாங்கமும் பிரசாரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனமும் இணைந்து, புத்ரா ஹைட்ஸில் உள்ள இரண்டு தற்காலிகத்க் தங்குமிட மையங்களில் இருந்து பள்ளி செல்லும் மாணவர்களுக்கு உதவ நாளை முதல் 10 சிறப்பு வேன்களை வழங்குகின்றன. இந்த முயற்சி புத்ரா ஹைட்ஸ் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு காரணமாக மேற்கொள்ளப்படுகிறது என்று சிலாங்கூர் மகளிர் மேம்பாடு, சமூக நல ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பாஃல் சாரி தெரிவித்தார்.
ஈகைத் திருநாள் விடுமுறைக்குப் பிறகு திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், எந்த மாணவரும் பள்ளிக்குச் செல்வதில் சிரமம் ஏற்படக்கூடாது என்பதை உறுதிச் செய்வதற்காக இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துச் சவால்களை மாநில அரசு கவனத்தில் கொண்டுள்ளது. எனவே மாணவர்களை அவரவர் பள்ளிகளுக்குத் திட்டமிட்டபடி அழைத்துச் செல்ல 10 வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்த 196 மாணவர்கள் இப்பகுதியில் உள்ள 34 பள்ளிகளில் கல்வி பயில்கின்றனர் என்று அன்பாஃல் தெரிவித்தார்.