நிபோங் திபால், ஏப்ரல்.06-
அமெரிக்கா மலேசியாவுக்கு 24 விழுக்காடு இறக்குமதி வரி விதிப்பது தொடர்பான தொழில் துறையினரின் கருத்துகளை பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கும் அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அசிஸுக்கும் அனுப்பி வைத்துள்ளார் பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ். அடுத்த வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வட்டமேசை கலந்துரையாடலுக்குத் தலைமைத் தாங்கவுள்ளதாகவும், இதில் மாநில பொருளாதார மேம்பாட்டுக் குழு, பினாங் இன்ஸ்டிடியுட், தொழில் தலைவர்கள், தொழில் அமைப்புகளின் நிகராளிகள் பங்கேற்பார்கள் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். அனைத்து கருத்துகளையும் பரிசீலித்த பிறகு, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்காவின் வரி விதிப்பால் மலேசியா, குறிப்பாக பினாங்கின் பொருளாதாரம் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சில நிபுணர்கள் கணித்துள்ளதையும் சோவ் குறிப்பிட்டார். ஆசியான் வட்டாரத்தில் உள்ள நேரடி போட்டியாளர்களான அண்டை நாடுகளை விட மலேசியாவுக்கு விதிக்கப்படும் வரி குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். 32 முதல் அதிகபட்சமாக 49 விழுக்காடு வரை வரி விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய சோவ், இருப்பினும், இதுபோன்ற பகுப்பாய்வுகள் ஆரம்பக் கட்ட கருத்துகள் மட்டுமே என்றும், வரி விதிப்பின் முழு தாக்கத்தையும் புரிந்து கொள்வதற்கு முன்பு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.