கோலாலம்பூர், ஏப்ரல்.06-
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ இன்று இரவு கோலாலம்பூரில் பிரதமர் அன்வார் இப்ராஹிமைச் சந்திக்கிறார். இஃது ஈகைத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் நட்பு அடிப்படையிலான சந்திப்பு என்று இந்தோனேசிய அமைச்சரவை செயலாளர் தெடி இண்ட்ரா விஜயா தெரிவித்தார். பிரபோவோ , அன்வாரை ஆசியான் வட்டாரத்தில் அனுபவம் வாய்ந்த மூத்தத் தலைவராக மதிக்கிறார் என்றும், அன்வார் முந்தைய காலகட்டத்தில் உயர் பதவி வகித்தவர், மேலும் வயது முதிர்ந்தவர், பிரபோவோவின் நெருங்கிய நண்பர் என்றும் தெடி கூறினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு அதிபர் பிரபோவோ உடனடியாக ஜகார்த்தாவுக்குத் திரும்புவார் என்று தெடி தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்த இறக்குமதி வரி கொள்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு தெடி பதிலளிக்கவில்லை. இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசுவார்கள் என்று மட்டும் அவர் கூறினார். முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று, ஆசியானின் தற்போதைய தலைவர் என்ற முறையில் மலேசியா, பன்னாட்டு வர்த்தகத்தில் நீதியின் கொள்கை நிலைநாட்டப்படுவதை உறுதிச் செய்வதற்காக, பரஸ்பர வரி விதிப்பு பிரச்சினை குறித்து உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அன்வார் கூறியிருந்தார்.