சிரம்பான், ஏப்ரல்.07-
சாலையில் ஏற்பட்ட தகராற்றில் மாது ஒருவரின் முகத்திலேயே குத்திக் காயப்படுத்தியதாக இராணுவ வீரர் ஒருவர், இன்று சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
35 வயது அப்துல் அபு பாகார் என்ற அந்த இராணுவ வீரர் மாஜிஸ்திரேட் சையிட் பாஃரிட் சையிட் அலி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
அந்த இராணுவ வீரர், கடந்த மார்ச் 29 ஆம் தேதி இரவு 10.20 மணியளவில் சிரம்பான், செனாவாங், தாமான் சத்ரியா வீடமைப்புப் பகுதியில் 28 வயது மாதுவைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த இராணுவ வீரர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
எனினும் அந்த இராணுவ வீரர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினார்.
சம்பந்தப்பட்ட இராணுவ வீரர், அந்த மாதுவைத் தாக்கும் காட்சியைக் கொண்ட காணொளி, சமூக வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அந்த நபரின் செயலை மலேசிய இராணுவப் படை தற்காக்காது என்று அதன் தளபதி அண்மையில் அறிவித்து இருந்தார்.