வியாக்கியானம் வேண்டாம், பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஏப்ரல்.07-

எந்தவொரு விவகாரத்தையும் அரசியலாக்க முயற்சிக்கும் எந்தவொரு தனிநபருக்கும் இடமோ, வாய்ப்போ வழங்கப்படக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நினைவுறுத்தியுள்ளார்.

நடந்த சம்பவம் தொடர்பாக கருத்து என்ற பெயரில் வியாக்கியானம் செய்ய முயற்சிக்கும் நபர்களுக்கு வழிவிடக்கூடாது. சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தி, தங்களின் ஆற்றாமையை வெளிப்படுத்தும் நபர்களுக்கு தனிப்பட்ட நலன் உண்டு என்று பிரதமர் நினைவுறுத்தினார்.

பிரதமர் தனது நினைவுறுத்தலில் யாரின் பெயரையும் குறிப்பிடவில்லை என்ற போதிலும் கடந்த வாரம் ஏற்பட்ட புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் நலனைப் பேணுவதாக கூறி, சமூக வலைத்தளங்களில் நடப்பு அரசாங்கத்தைக் குறை கூறி, விமர்சித்து வரும் நபர்களைச் சுட்டுவதாக உள்ளது என்று அறியப்படுகிறது.

எனினும் அண்மையில் நில விவகார சர்ச்சையினால் பாதிக்கப்பட்ட கோலாம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம், பலூன் வியாபாரி விவகாரம் முதலியவற்றுக்கு நல்ல முறையில் தீர்வு காணப்பட்டிருப்பதை பிரதமர் தமது உரையில் சுட்டிக் காட்டினார்.

இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துறை பணியாளர்களுடனான மாதாந்திரச் சந்திப்புக் கூட்டத்திற்குத் தலைமையேற்று உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS