கிழக்கை நோக்கி ஆன்மீகப் பயணம் தொடங்கியது

கோலாலம்பூர், ஏப்ரல்.07-

பகாங், மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கிழக்கை நோக்கி ஆன்மீகப் பயணம், இன்று திங்கட்கிழமை விடியற்காலையில் பத்துமலை, திருத்தலத்திலிருந்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

கல்விமானும், பொது நலத் தொண்டரும், மூடா கட்சியின் சிலாங்கூர் மாநிலத் துணைத் தலைவருமான டாக்டர் R. சிவபிரகாஷ் முன்னிலையில் தொடங்கிய கிழக்கை நோக்கிய இந்த ஆன்மீகப் பயணத்தில், ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்து கொண்டுள்ளனர்.

மலேசிய பெருநடை வீரரும், சீ விளையாட்டுப் போட்டியில் தங்கங்களைக் குவித்தவருமான K. திருமால் அவர்களினால் 70 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட கிழக்கை நோக்கி ஆன்மீகப் பயணத்தை, கிளப் மராத்தோன் மாரான் ஏற்பாடு செய்துள்ளது.

18 ஆவது ஆண்டாக, கிளப் மராத்தோன் மாரான், இந்த ஆன்மீகப் பயணத்தை முன்னெடுத்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான 204 கிலோ மீட்டரை உள்ளடக்கிய இந்த ஆன்மீகப் பயணம், இறையருளை வேண்டும் அதே வேளையில், திடமான மன உறுதி கொள்ளவும், உடல் ஆரோக்கியத்தைப் பேணவும், இளையோர்கள் முதல் பெரியோர்கள் வரை அதிகளவில் பங்கேற்று இருப்பது, மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது என்று, இந்த ஆன்மீகப் பயணத்திற்கு ஆதரவு நல்கி வரும் டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.

மலேசிய செம்பிறைச் சங்கம், போலீஸ் படை, ரேலா மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன், காலை இருளில், தொடங்கிய இந்த ஆன்மீகப் பயணத்திற்கு, பெருநடையாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு, ரேலா படையினர், செம்பிறைச் சங்க உறுப்பினர்கள், ஆபத்து அவசரத் தேவைகளுக்கு உரிய தளவாடங்களை வழங்குவதற்கு லோரிகள் உடன் சென்ற வண்ணம் உள்ளதாக இந்த பயணத்தில் ஒரு பங்கேற்பாளராகத் தன்னை பிணைத்துக் கொண்ட டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.

வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிறைவு பெறவிருக்கும் இந்த நான்கு நாள், கிழக்கை நோக்கி ஆன்மீகப் பயணத்தின் பங்கேற்பார்கள், இன்று பிற்பகலில் காராக்கைச் சென்றடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பத்துமலைத் திருத்தலத்தில், டாக்டர் சிவபிரகாஷ் தலைமையில் பங்கேற்பாளர்களுக்கு விளக்க உரை வழங்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS