மாரான், ஏப்ரல்.07-
மாது ஒருவரையும், அவரின் உறவுக்காரப் பையனையும் கத்தியால் குத்தி, ஆவேசமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவரைப் பொது மக்கள் அடித்துக் கொன்றனர்.
இச்சம்பவம் நேற்று காலை 10 மணியளவில் பகாங், மாரான், பெஃல்டா ஜெஙா 2 இல் நிகழ்ந்துள்ளது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரோந்துப் போலீசார், ஆடவர் ஒருவர், கைகள் கட்டப்பட்ட நிலையில் கீழே கிடந்ததாக மாரான் மாவட்ட போலீஸ் தலைவர் வோங் கிம் வாய் தெரிவித்தார்.
அசைவின்றிக் கிடந்த அந்த நபரின் உடலில் வீக்கமும், ரத்தக் கட்டுகளும் காணப்பட்டன. மருத்துவ அதிகாரிகள் சோதனை செய்ததில் 57 வயதுடைய அந்த நபர் இறந்து விட்டதை உறுதிச் செய்தனர்.
முன்னதாக அந்த நபர் 52 வயதுடைய மாதுவையும், அவரின் 16 வயது உறவுக்காரப் பையனையும் கத்தியால் குத்தியதாகத் தெரிய வந்துள்ளது.
சம்பந்தப்பட்ட நபர், அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் நான்கு நபர்களை போலீசார் கைது செய்துள்ளதாக வோங் கிம் வாய் தெரிவித்தார்.