கூலாய், ஏப்ரல்.07-
அண்மையில் ஜோகூர், கூலாய், பண்டார் இண்டாபூராவில் பிராணிகள் பராமரிப்பு மையத்தில் கும்பல் ஒன்று, சுற்றி வளைத்துக் கொண்டு, இந்தியப் பிரஜை என்று நம்பப்படும் ஆடவர் ஒருவரைத் தாக்கும் காட்சி, சமூக வளைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்து அந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை அறிக்கை ஒன்றைத் திறந்துள்ளனர்.
X சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த காணொளி தொடர்பில் முதிர்நிலை போலீஸ்காரர் ஒருவர் போலீசில் புகார் செய்து இருப்பதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் தான் செங் லீ தெரிவித்துள்ளார்.
அந்த இந்தியப் பிரஜை கண்மூடித்தனமாகக் கன்னத்தில் அறையும் காட்சியைக் கொண்ட சம்பவம், பண்டார் இண்டாபூராவில் உள்ள ஒரு பிராணிகள் பராமரிப்பு மையத்தில் நிகழ்ந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று தான் செங் லீ குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக தகவலைக் கொண்டுள்ளவர்கள், போலீசாருடன் தொடர்பு கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு தான் செங் லீ கேட்டுக் கொண்டுள்ளார்.
பணத்தைத் திருடி விட்டதாகக் கூறி, அந்த இந்தியப் பிரஜையைச் சம்பந்தப்பட்ட கும்பலைச் சேர்ந்த ஒருவர் கன்னத்தில் அறையும் 16 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளி சித்தரிக்கிறது.
எனினும் எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பொது மக்களுக்கு அவர் ஆலோசனை கூறினார்.