மலாக்கா, ஏப்ரல்.07-
உல்லாசத்திற்காக அறிமுகமில்லாத மாற்றுத் திறனாளிப் பெண்ணை அழைத்துச் சென்ற வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மலாக்கா, தாமான் ரம்பாய் இடாமான் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அந்த மாற்றுத் திறனாளிப் பெண்ணை, கடந்த இரண்டு தினங்களாக காணவில்லை என்று குடும்பத்தினர் புகார் அளித்து இருந்தனர்.
இந்நிலையில் அந்தப் பெண்ணுடன் 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், கெடா, சுங்கை பட்டாணி, ஜாலான் ஜாத்தியில் இன்று அதிகாலை 4 மணியளவில் பிடிபட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.
சிரம்பான், ஈப்போ, புக்கிட் மெர்தாஜம், பாலிங் ஆகிய பகுதிகளில் அந்தப் பெண்ணுடன் வர்த்தகர் சுற்றித் திரிந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடச் சென்ற அந்த மாற்றுத் திறனாளிப் பெண், பின்னர் வீடு திரும்பவில்லை என்று குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர் என்று கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வர்த்தகர், போதைப்பொருள் தொடர்பாக ஏற்கனவே குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.